ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி – இலங்கையை பாராட்டியது உலக சுகாதார ஸ்தாபனம்!

Friday, July 30th, 2021

இலங்கையில் ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ட்விட்டர் பதிவொன்றில் இந்த வாழ்த்துச் செய்தி பகிரப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பு நடவடிக்கையின் கீழ், இலங்கையில் நேற்று ஒரே நாளில் அதிகபடியானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவின் தகவல்படி, நேற்றையதினம் மாத்திரம் இலங்கையில் 5 இலட்சத்து 15 ஆயிரத்து 830 பேருக்கும் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களில் 4 இலட்சத்து 18 ஆயிரத்து 494 பேர், சைனோபாம் முதலாம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களாவர். அத்துடன் 56 ஆயிரத்து 738 பேருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதேநேரம் பைசர் தடுப்பூசி 38 ஆயிரத்து 430 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும், மொடெர்னா தடுப்பூசிகள் 2 ஆயிரத்து 168 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும் ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறிப்பிடத்தக்க அடைவுமட்டம் ஒன்றை அரசாங்கமும் சுகாதார அமைச்சும் அடைந்திருப்பதாக அந்த செய்தியில் சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: