ஒரு மணித்தியாலத்திலும் நாட்டில் 5 கொரோனா மரணங்கள் : தீர்மானம் எடுப்பதில் தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் பேரழிவுக்கு கொண்டுசெல்லும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
Friday, August 13th, 2021நாட்டில் கொரோனா தொற்றால் ஒவ்வொரு மணி நேரத்திலும் ஐந்து பேர் மரணிக்கின்றனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா கொரோனா மிக வேகமாகப் பரவும் மோசமான சூழ்நிலையில் நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் இதுவரை ஒவ்வொரு மணி நேரத்திலும் ஐந்து பேர் கொரோனா தொற்றால் மரணிக்கின்றனர் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதாரம் என்ற பெயரில் நாட்டை முடக்கத் தீர்மானம் எடுப்பதில் தாமதமாகும் ஒவ்வொரு நாளும், டெல்டா கொரோனா வைரஸ் மிக வேகமாக ‘நாடு முழுவதும் பரவி’ நாட்டில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வைத்தியசாலைகளின் கொள்ளளவு திறனை மீறும் சந்தர்ப்பம் ஏற்படலாம் என்றும் நாட்டை முடக்குவது தொடர்பாகத் தீர்மானம் எடுப்பதில் தாமதப்படுத்துவோர் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிப்பதால் நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசன் அதிகபட்ச கொள்ளவை எட்டப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்றும் அதனால் ஒட்சிசனை இறக்குமதி செய்வதன் தேவை ஏற்பட்டுள்ளதால் பொருளாதாரத்துக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் எனவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நாங்கள் எதிர்கொள்ளும் கொரோனா தொற்று நோய்க்கு உலகின் ஏனைய நாடுகள் பின்பற்றும் உத்திகளை நாங்கள் கவனத்தில் எடுப்பது அவசியமாகும் என்றும் தொற்று நோய் மற்றும் சமூக மருத்துவத்தின் அறிவியல் முறைகள் மூலம் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, விஞ்ஞான ரீதியில் அல்லாத ஏனைய கருத்துகள் தோன்றினால் இந்த நிலைமை மேலும் சிக்கலாக அமையும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடுமையாக எச்சரித்து அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|