ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதில்லை – திலீபன் எம்.பி குற்றச்சாட்டு!

Saturday, May 20th, 2023

மாவட்ட மற்றும் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்த கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்ட மற்றும் பிரதேச செயலக அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வருவதில்லை. ஆனால் தனிநபர்களின் பிரச்சனைக்கு உடனடியாக வருகிறார்கள். மன்னாரில் இடம்பெற்ற மண் ஆட்களின் பிரச்சனையில் சில மதகுருமாருடன் இணைந்து சில பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக மண் அள்ளுவதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

இதை விட, மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் உள்ளன. இதேபோல் அந்த பிரச்சனைகளையும் பேசி மக்களுக்கான தீர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி தலையையில் கூட்டம் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் அபிவிருத்தி சார்ந்த எந்த கருத்துக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசவில்லை. மாறாக தொல்பொருள் சம்மந்தப்பட்ட பிரச்சனை தான் பேசப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரம், வயற்காணிகளை விடுவித்தல், தொழில் துறைகளை ஏற்படுத்துதல் தொடர்பில்  அங்கு பேசவில்லை. எங்களுக்கு கிடைத்த சந்தர்பத்தில் காணிவிடுவிப்பு, காணி ஆவணங்களை பெற்றுக் கொடுத்தல், நில அளவை பிரச்சனைக்கு தீர்வு காணல் தொடர்பில் பேசி முன்னேற்றம் கண்டுள்ளோம்.

அதன் ஒரு கட்டமாக வட இலாகாவுடன் பேசி காணிகள் விடுவிக்கப்படுகிறது. மத்திய தர வர்க்கத்தின் காணிகள் விடுவிக்கப்படுகிறது. ஆவணங்கள் வழங்கப்படுகிறது. எனவே நாங்கள் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: