ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்கள் போர்க்கொடி – இழப்பீடு தரப்படாததை எதிர்த்து மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடுகின்றனர்!

Wednesday, February 6th, 2019

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தெழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்கள் தங்களுக்கான சம்பளங்கள் மற்றும் இழப்பீடுகள் இன்னமும் கிடைக்கப்பெறாமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையில் 74 நிரந்தர பணியாளர்களாகிய நாம் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த காலத்தில் 1990 ஆம் ஆண்டு ஜீன் மாதம் தொடக்கம் நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக வேறு மாகாணங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு சமூகம் கொடுக்காத காரணத்தால் வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளோம். இதனால் அந்தக் காலப்பகுதியில் வாழ்வாதாரம் இல்லாமல் காணி, நகைகள் என்பவற்றை விற்றோம். எமது சக ஊழியர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் மனதளவில் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அரசுக்கு பல தடவைகள் எடுத்துக்கூறிய போதிலும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. ஆரம்ப காலத்தில் கைத்தொழில் அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தற்போது தலைமை அமைச்சராக உள்ளார்.

அவரிடம் இதுபற்றி பல தடவைகள் முறையிட்டுள்ளோம். அத்துடன் தற்போதைய கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடமும் முறையிட்டுள்ளோம். எனினும் எவ்விதப் பயனும் இல்லை.

பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம், காங்கேசன்துறை சீமேந்து கூட்டுத்தாபனம், வாழைச்சேனை காகித தொழிற்சாலை, புல்மோட்டை இல்மனைட் கூட்டுத்தாபனம், அம்பாறை இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலை போன்றவற்றுக்கு கைத்தொழில் அமைச்சு அல்லது பொதுநிர்வாக அமைச்சு ஏதோவொரு வழியில் இழப்பீடு வழங்கியுள்ளதை அறிகின்றோம்.

இது சம்பந்தமாக அரச தலைவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டதான தரப்பினருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்.

எனினும் எமக்கு ஏமாற்றமே எஞ்சியது. தற்போது வேறு வழியில்லாமல் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவை நாடுவது என்று முடிவெடுத்துள்ளோம் – என்றனர்.

Related posts: