ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற ஊடாடும் உரையாடலில் இலங்கைக்கு அமோக ஆதரவு!

Wednesday, March 9th, 2022

மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற ஊடாடும் உரையாடலில் இலங்கைக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் எழுத்துபூர்வமான அறிக்கை குறித்த ஊடாடும் உரையாடல், கடந்த தினம் ஜெனிவாவில் இடம்பெற்றது.

நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்கு பல நாடுகளிடமிருந்து இலங்கைக்கு பெரும் ஆதரவு கிடைத்ததுடன், புறநிலை மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் ஆகியன பலதரப்பு ஈடுபாட்டிற்கான முக்கிய அடிப்படையாக மீண்டும் வலியுறுத்தப்பட்டன.

ஊடாடும் உரையாடலில் உரையாற்றிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக தமது கருத்துகளைப் பதிவு செய்துள்ளன.

தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியா, மற்றும் ஆபிரிக்காவின் பல அரசுகளிடமிருந்து இலங்கைக்கான ஆதரவு வெளிப்படுத்தப்பட்டது.

சவுதி அரேபியா, மாலைதீவு, சீனா, கியூபா, ஜப்பான், பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

சட்டச் சீர்திருத்தங்கள் உட்பட தேசிய செயன்முறைகளின் மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பு, கொவிட்-19 தொடர்பான சவால்களைப் பொருட்படுத்தாமல் இந்த விடயத்தில் இலங்கை அடைந்து கொண்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றை உலகளாவிய தெற்கின் அரசுகள் பாராட்டின.

தன்னார்வ தேசிய செயன்முறைகளை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச சமூகம், பாரபட்சமற்ற மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மைகள், அரசியல்மயமாக்காமை போன்ற அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: