ஐ.நா பொதுச் செயலாளர் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட சந்திப்பு – உள்ளகப் பொறிமுறையூடாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் டயஸ்போராவுக்கு ஜனாதிபதி அழைப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, நாடுகளுக்கிடையே ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது முழு ஆதரவை வழங்கும் என ஐநா பொதுச் செயலாளர், ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பை ஐநா பொதுச் செயலாளர் வழங்கியதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
1978 இல் அகில நாடாளுமன்ற சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கு வருகைதந்திருந்ததை நினைவு கூர்ந்த அவர், கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலைக்குச் சென்றதையும் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.
இதனிடையே ஐ.நாவின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் உறுதியளித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, டயஸ்போராவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|