ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமைக்கான இந்தியா மற்றும் ஜப்பானின் முயற்சிகளுக்கு இலங்கை ஆதரவளிக்கும் – அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022

அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது ஜப்பானியப் பயணத்தின் போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்புக்கு முன்னரும், சந்திப்பின்போதும் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையை வழங்கும் பரப்புரைக்கு இலங்கை ஆதரவளிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் ஆறாம் திகதி ஜெனிவா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தக் கருத்து வந்துள்ளது.

குறிப்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமைக்கான இந்தியா மற்றும் ஜப்பானின் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என்ற உறுதிமொழியை அவர் ஜப்பானில் வழங்கியுள்ளார்.

ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட நிரந்தரமற்ற உறுப்புநாடான இந்தியாவின் இரண்டு ஆண்டுகால பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் இந்தக் கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அரங்கில் இந்தியா பெரிய பொறுப்புகளை ஏற்கத் தயாராக உள்ளதாக கடந்த சனிக்கிழமையன்று, வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், ஐ.நா பொதுச் சபையின் விவாதத்தில் கருத்துதெரிவித்த நிலையில் அதனை பாதுகாப்புச் சபையின் நிரந்தர நாடாக உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவு என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இதேவேளை ரஷ்யாவும் இந்தியா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையை பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: