ஐ.நா தொடர்பில் ஈ.பி.டி.பி கூறிவந்த நிலைப்பாட்டையே இன்று இதர தமிழ் கட்சிகளும் ஏற்றுள்ளன – முன்னாள் தவிசாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, March 26th, 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, தமிழ் மக்களுக்கு ஒரு முழுமையான தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாக வலியுறுத்தி வருகின்றார் என தெரிவித்துள்ள பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் அதனையே இன்று அவலப்பட்ட மக்களின் ஏக்கங்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமராட்சி கிழக்கு அம்மன் சிவனொளி முன்பள்ளியில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் வேலுப்பிள்ளை சசிதரன் தலைமையில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –   

ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் தமிழ் மக்களுக்கு முழுமையான நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறை உள்வாங்கப்படவில்லையென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் குற்றவியல் நீதிமன்றம் குறித்து எவ்வித விடயதானங்களும் உள்வாங்கப்படாமல் மாறாக உள்ளகப் பொறிமுறை ஊடான தீர்வையே மையப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் நிறைவேற்றப்பட்ட பிரேரணை எதிர்கால குற்றவியல் நீதிமன்ற பொறிமுறையொன்றினை உருவாக்கும் விதமாக சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் ஆராயும் பொறிமுறையினை உருவாக்கும் என கூறுகின்றார்.

உண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் இலங்கை உள்விவகாரம் தொடர்பாக எவ்விதமான கட்டளைகளையோ உத்தரவுகளையோ அல்லது தண்டனைகளையோ பிறப்பிக்க முடியாது என்பது மிகத் தெளிவாக தெரிகின்றது.

“நான் ஒரு சட்டத்தரணி” என்ற ரீதியில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையல்ல என சுமந்திரன் கடந்த நல்லாட்சி காலத்தில் கூறியிருந்ததும் இந்த இடத்தில் நினைவுபடுத்தி கொள்ள விரும்புவதாக தெரிவித்த ஶ்ரீரங்கேஸ்வரன்  1983 ஆம் ஆண்டு காலத்திலிருந்து மாறி மாறி மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மீது ஆயுத வன்முறை நீடித்தகாலம் வரையான காலம்வரை இவ்வாறான மனித உரிமை மீறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சகல ஆட்சியாளர்கள் மீதும் சுமத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பாதிப்புக்குள்ளான மக்களுடைய அவலங்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை தங்களுக்கொரு அரசியல் அடித்தளத்துக்கான கருவியாக பயன்படுத்த தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் முனைகின்றனரே அன்றி உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அல்ல எனவும் இதன்போது சுட்டிக்காட்டி ஶ்ரீரங்கேஸ்வரன் தமிழ் மக்கள் இவ்வாறு தேசியம் பேசி உறவாடி வாக்குவங்கிகளை நிரப்புவதற்கும் புலம்பெயர் தமிழர்களின் நிதிகளை காணிக்கையாக பெற்றுக் கொள்வதற்கு இம் மக்களின் பிரச்சினைககளை பகடைகாய்களாக பயன்படுத்தி அம்மக்களுக்கான தீர்வை இழுத்தடிப்பு செய்வதிலேயே குறியாக செயற்படுகின்றனர் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: