ஐ.நாவில் இலங்கை தனது கருத்துக்களை முன்வைக்கும் – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன!

Saturday, February 13th, 2021

நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் இலங்கை தனது கருத்துக்களை முன்வைக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 22 ஆம் திகதிமுதல் மார்ச் 23 வரை நடைபெறவுள்ள அமர்வின் ஆரம்ப நாள்களில் நடைபெறும் உயர்மட்ட கூட்டங்களில் பொதுவாக நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள்.

இந்நிலையில் கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, மொண்டிநீக்ரோ, வடமசிடோனியா ஆகியவற்றின் சார்பாக பிரித்தானியாவின் வதிவிடப் பிரதிநிதி ஜூலியன் பிரெய்த்வெயிட் இலங்கை மீதான அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.

இலங்கையின் முன்மொழிவுடன் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை மேற்கொண்ட பதில் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் ஆணையாளர் தயாரித்த அறிக்கையும் இவ்வமர்வில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கருத்துக்களைத் தெரிவிக்கவிருக்கும் இதர நாடுகளின் பிரதிநிதிகள் தரப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மற்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் அடங்குவர்.

கோர் குழும நாடுகளால் முன்வைக்கப்படும் புதிய தீர்மானம், ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 30 கீழ் 1 – 40 கீழ் 1 தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், குறித்த தீர்மானத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகியதாக புதிய அரசாங்கம் அறிவித்தது. இதேவேளை கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கும்போது, அதனை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு 16 தவறான விளக்கங்கள் அடங்கிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: