ஐநாவின் சவால்களுக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்தது – வெளிவிவகார செயலர் தெரிவிப்பு!

Wednesday, March 16th, 2022

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்ததாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்களுக்கு தர்க்க ரீதியாக விடயங்களை முன்வைத்து, அவற்றை தெளிவுபடுத்திக் கொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சவால்களும் இலங்கையும்’ என்ற தலைப்பில், ஜனாதிபதி ஊடக மையம் ஏற்பாடு செய்த, ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் குறித்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

31 நாடுகள், இலங்கைக்காக பேரவையின் இடைச் செயற்பாட்டுக் கலந்துரையாடலின் போது குரல் கொடுத்தன. உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பதே அங்கு இலங்கைப் பிரதிநிதிகளின் பிரதான தர்க்கமாக அமைந்தது.

இலங்கைப் பிரதிநிதிகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 51 ஆவது அமர்வு, இலங்கை எதிர்கொள்ளும் அடுத்த சவாலாகும். இதற்கு முறையான கால அட்டவணையுடன் கூடிய உரிய திட்டமிடல்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும், அதற்காக சிவில் சமூகம், புத்திஜீவிகள் உட்பட அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டரை வருடங்களைப் போன்று, குறிப்பாக கடந்த ஆறு மாதங்களில் ஏற்பட்டுள்ள தெளிவான முன்னேற்றம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்த 81 சிறைக்கைதிகளை விடுதலை செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற பல சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: