ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து நாளைமறுதினம் நாடாளுமன்றில் விவாதம்!

Monday, March 8th, 2021

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாளைமறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை குறித்த விவாதத்தை 10ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 04ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் அதனை அடுத்து, ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகும் அதேவேளை, முற்பகல் 10.00 மணிமுதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, கடந்த அமர்வில் ஒத்திவைக்கட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்குவிதியும் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள் குறித்தும் மு.ப. 11.00 முதல் பி.ப. 3.30 மணி வரை விவாதம் நடத்த நாடாளுமன்ற அலுவல்கள்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தீர்மானித்ததாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்நாட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு நாடாளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்துள்ள பிரேரணையும் சபையில் சமர்பிக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: