ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் – அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவிப்பு!

Thursday, February 25th, 2021

ஏப்ரல் 21தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த ஆளும் தரப்பு தயாராகவுள்ளதாக சபை முதல்வர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக இன்று முற்பகல் 10 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடியது. இதையடுத்து, சபை முதல்வரான அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்திருந்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையிட்டு, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை, சபையின் விசேட அனுமதியின் பேரில் சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலமாக மாத்திரம் இந்த சந்தர்ப்பத்தில் முன்வைப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன இதன்போது தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கருத்து தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, இந்த அறிக்கை தொடர்பில் தங்களுக்கு மூன்று நாட்கள் விவாதம் அவசியமாகும் என சபாநாயகரிடம் கோரியிருந்த நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிப்பதாக சபாநாயகர் பதிலளித்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல, குண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள் யாவர் என்பது தொடர்பில் அதில் இல்லை என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இதையடுத்து, கருத்து தெரிவித்த சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, இது தொடர்பில் விவாதம் ஒன்றை வழங்குவதற்கு தாங்கள் முன்னரே இணங்கி இருந்ததாகவும், அதனை புதிதாக கோருவதற்கு அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

000

Related posts: