ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிக்க அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – புதிய அரசிடம் பேராயர் இல்லம் கோரிக்கை!

Monday, August 10th, 2020

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளர் அருட்தந்தை கலாநிதி கெமிலஸ் பெர்னாண்டோ விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இது தொடர்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

புதிய அரசாங்கம் தெரிவானமைக்காக வாழ்த்துக்களை பேராயர் இல்லம் தெரிவித்துக் கொள்கின்றது. அதேபோல் அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள பாரிய நம்பிக்கைக்கு அமைய அரசாங்கம் செயற்படும் என நாம் நம்புகின்றோம். அதேபோல் நாட்டினை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு செல்ல அரசாங்கம் சகல நடவடிக்கையும் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

அத்துடன் கடந்த ஆண்டு இடம்பெற்ற மிகவும் மோசமான ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்தி இந்த தாக்குதலின் பின்னணில் உள்ள குற்றவாளிகளை கண்டறிந்து யார் இந்த செயற்பாடுகளில் தொடர்புபட்டனரோ அவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதத்தில் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என்பதே கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினதும் கிறிஸ்தவ மக்களினதும் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே அரசாங்கம் அதனை நிறைவேற்ற வேண்டும் என அவர் அரசாங்கத்திற்கு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: