ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு – ஜனாதிபதி!

Tuesday, July 2nd, 2019

அனைத்துலக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவியுடனேயே, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய போதைப்பொருள் தடுப்பு வார இறுதி நாள் நிகழ்த்திய உரையின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“அனைத்துலக பயங்கரவாத குழுக்கள் பெரும்பாலும் போதைப்பொருள் வணிகத்தின் மூலம் ஈட்டப்பட்ட வருவாயின் மூலமே நிதியைப் பெறுகின்றன.

போதைப்பொருள் மற்றும் மரணதண்டனை ஆகிய விவகாரங்கள் தொடர்பாக, சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசுடன் கலந்துரையாடினேன்.

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது என்பதை அவரிடமத் சுட்டிக்காட்டிய வேளையில், மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறீர்களா என்று ஐ.நா பொதுச்செயலர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நான் உறுதியாகப் பதிலளித்திருந்தேன்.

எனது கண்களுக்கு முன்பாக நாடு அழிக்கப்படுவதை பார்க்க முடியாது என்பதால் மரணதண்டனை கட்டாயம், நடைமுறைப்படுத்தப்படும்.

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், போதைப்பொருட்களை நாட்டில் இருந்து அகற்றுவதற்கு என்ன செய்திருக்கின்றன?

இலங்கை மரணதண்டனையை நடைமுறைப்படுத்தினால் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை நிறுத்த நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியிருப்பது ஒரு எச்சரிக்கை தான்.

எந்தச் சூழ்நிலையிலும், சுதந்திரமான நாடு ஒன்றை அச்சுறுத்த முடியாது” என்றும் அவர் கூறினார்.

Related posts: