எவர்தான் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சடுதியாக மாற்றமுடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் தெரிவிப்பு!

நாட்டில்யார் ஆட்சிக்குவந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சடுதியான மாற்றத்தினை கொண்டுவரமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளபோதிலும் அரசாங்கம் கிராமமட்ட பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அதனடிப்படையிலேயே சமுர்த்தி பயனாளிகளுக்கு அமைச்சரவையின் அனுமதியுடன் அதிகரித்த நிதி வழங்கப்படுகின்றது.
இலங்கை அரசாங்கம் அரசாங்க செலவீனங்களை மிக கடுமையாக கட்டுப்படுத்தி வருகின்றது. எங்களுக்குகூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் செலவுகளை கட்டுப்படுத்துவது போன்று குடும்பங்களும் அத்தியாவசிய தேவைகளுக்கு பணத்தினை செலவு செய்யவேண்டும்.
சிலர் ஏதோ இலங்கைக்கு மாத்திரம்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதுபோன்று பேசிவருகின்றனர். இன்று சர்வதேசம் எங்கும் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றது.
மிக நீண்டகால முடக்கம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக இந்த நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்த நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு ஒவ்வொருவரும் செயலாற்ற வேண்டும். இன்று கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்த சூழ்நிலையினை மக்கள் சிறந்தமுறையில் கையாண்டு தமது வாழ்க்கை தரத்தினை உயர்த்துகின்றபோதுதான் நாடு உயரமுடியும். இதில் வெறுமனே அரசாங்கம் பிழைவிடுகின்றது.
எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் மந்திரத்தால் மாங்காய் பறிக்க முடியும் என்று ஊடகங்கள் உருவாக்கமுனைவது தெரிகின்றது.
நிச்சயமாக அப்படிசெய்ய முடியாது. எவர்தான் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சடுதியாக மாற்றமுடியாது.
இருந்தபோதிலும் உறுதியான அரசாங்கம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் இதனை மிகவும் கவனமாக முகாமைசெய்து மீண்டெழுந்து வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|