எவரையும் கைவிடாதீர்கள் நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன – நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு!

Thursday, October 13th, 2022

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்துக்கு இன்றுவரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

‘எவரையும் கைவிடாதீர்கள்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில், 6 இலட்சத்து 24 ஆயிரத்து 714 விண்ணப்பங்கள் இன்றுவரை தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள 341 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள நலன்புரி உதவித் தகவல் அலகுகள் மூலம் அனைத்து விண்ணப்பங்களும் உடனடியாக தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நலன்புரித்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் அல்லது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 3.3 மில்லியன் குடும்பங்களுக்கு மேலதிகமாக, 6 இலட்சம் குடும்பங்கள் புதிதாக குறைவருமான நிலையை அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் இரண்டாம் அலை மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி இதற்கு காரணமாகும்.

குறித்த 6 இலட்சம் குடும்பங்களும் இதற்காக விண்ணப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்த சமூக நலத்திட்டத்திற்கு 3.9 மில்லியன் குடும்பங்கள் விண்ணப்பிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

39 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் நலன்புரி உதவிகளைப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: