எல்.என்.ஜி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி!

Tuesday, February 16th, 2021

கெரவலப்பிட்டியில் லக்தனவி நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படும் 300 மெகாவாட் கொள்ளவிலான இலங்கையின் முதலாவது எல் என் ஜி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து இலங்கை மின்சார சபை மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கைக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அண்மையில் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் குழு இந்த உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கியதாக அதன் தவிசாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாத 18 சாதகமான நிபந்தனைகளை, அதில் உள்ளீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கும் குறித்த தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் விநியோகிக்கப்படும் ஒரு அலகு மின்சாரத்தின் விலை 14 ரூபாய் 98 சதமாகும். டீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய இரண்டையும் பயன்படுத்தி இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இயற்கை எரிவாயு வழங்கலை ஆரம்பிக்கும் வரையில் டீசலை பயன்படுத்தி ஆரம்பகட்ட மின்னுற்பத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கான விலைமனு கோரலுக்கு, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி இலங்கை மின்சார சபை, ஆணைக்குழுவின் அனுமதியை கோரியிருந்தது.

இதையடுத்து, இலங்கை மின்சார சபை, மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான தகைமையுடைய தரப்பினரை தெரிவுசெய்த பின்னர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதிக்காக முன்வைத்திருந்தது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாத முற்பகுதியில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் குழு தங்களது பதவியில் இருந்து விலகியது. இதையடுத்து ஆணைக்குழுவின் புதிய அதிகாரிகள் குழு அண்மையில் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த உடன்படிக்கைக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: