எல்லை நிர்ணயம் மக்களுக்கு விளக்கமில்லை – எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் !

Thursday, November 30th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மக்கள் தமது பிரதேச எல்லை நிர்ணயம் தொடர்பில் முழுமையாக விளக்கம் இல்லாது உள்ளனர் என மாகாணங்களுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் தவலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான கருத்துக்களைப் பதிவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது –

புதிய மாகாணசபைத் தேர்தல் முறையின் கீழ் விகிதாசார, தொகுதிவாரியாக 50 க்கு 50 என்ற அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்படவுள்ளது. அதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனாவால் எமது குழு தெரிவுசெய்யப்பட்டது. அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட நாம் ஊடகங்களில் விளம்பரங்கள் ஊடாகப் பொதுமக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் இருந்து கருத்துக்களைப் பெற்று வருகின்றோம்.

தற்போது நாம் மாவட்ட ரீதியாகச் சென்று கருத்துக்களைக் கேட்டுவருகின்றோம். யாழ்ப்பாணப் பயணத்துடன் நாம் இது வரை 17 மாவட்டங்களுக்குச் சென்றுள்ளோம். வவுனியா மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் சென்றோம்.

அங்கு மூவின மக்களும் வசித்து வருகின்றனர். சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தமக்கு எனப் பெரும்பான்மை கொண்ட தொகுதிகள் ஒன்றாவது ஒதுக்கித் தரப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாண பயணத்தின் போது தீவகப் பிரதேசத்தை எந்த தொகுதியுடன் இணைப்பது என்றே பேசப்பட்டுள்ளது. சிலர் யாழ்ப்பாண மாநகரசபையின் எல்லையுடன் இணைக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். வேறு சிலர் காரைநகர் தொகுதியுடன் இணைக்கலாம் என்ற கருத்தை முன் வைத்துள்ளனர். கருத்து வழங்கலுக்கு மக்கள் பெரும்பாலும் வரவில்லை. அலசியல்வாதிகள், பொதுஅமைப்பைச் சேர்ந்தவர்களே வந்தனர். யாழ்ப்பாண மக்கள் மத்தியில் எல்லை நிர்ணயம் தொடர்பில் முழுமையான விளக்கம் இல்லை என்பதை அறியமுடிகின்றது என்றார்.

Related posts: