எல்லை தாண்டுவதாலேயே மீனவர்களை கைது செய்கிறோம் – பிரதமர்!

இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க டெல்லியில் இந்திய அமைச்சர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரையே சந்தித்து உரையாற்றியுள்ளார்.
காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை ரணில் விக்ரமசிங்க சந்தித்தார்.
“இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினைகளை தீர்க்க, இரு நாட்டு மீனவர் அமைப்புகளும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்துவது அவசியம்.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போதுதான் கைது நடவடிக்கை எடுக்க வேண்டிவருகிறது. நவம்பர் முதல் வாரத்தில், இரு நாட்டு வெளியுறவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இலங்கை வடக்கு மாகாணத்தில் இப்போது மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலை, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று மாலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளதுடன், தொடர்ந்து வியாழக்கிழமை இந்தியப் பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னர் அன்று மாலையே இலங்கை திரும்ப உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|