எரிபொருள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது – விலை பிரிச்சினைக்கு தீர்வாக விலை சூத்திரத்தை அமுல்படுத்துவதே அனுகூலமானது – எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, November 27th, 2021

எரிபொருள் விலை பிரிச்சினைக்கு தீர்வாக விலை சூத்திரத்தை அமுல்படுத்துவதே தற்போதைய சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு அனுகூலமானதென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலக சந்தையில் ஒருபோதும் இல்லாதவாறு எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தின் போது பெற்றோல் பீப்பாய் ஒன்றின் விலையானது 56 முதல் 58 அமெரிக்க டொலராக காணப்பட்ட போதிலும், தற்போது 96 முதல் 98 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

2 வாரத்திற்கு ஒரு முறை லீற்றருக்கு ஏற்படும் நட்டம் தொடர்பில் அமைச்சுக்கு அறியப்படுத்துவோம். அதற்காக விலையினை அதிகரிப்பது மற்றும் வரியினை குறைப்பது தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.

இந்நிலையில் எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதே தற்போதைக்கு உசிதமானதாக படுகிறது. மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவே இந்த விலைசூத்திரத்தை முன்வைத்தார்.

அவர் இதனை முன்வைக்கும்போது எதிர்ப்பை வெளியிட்ட நாங்களே மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவதா? என்ற கேள்வி எழும். ஆனால் எதுவுமே இல்லாதிருப்பதைக் காட்டிலும் இவ்வாறான ஒன்றாவது இருப்பது சிறப்பானது என்றும் அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

அதேநேரம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் நாட்டிற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே பொதுமக்கள் அது குறித்த அச்சம் கொள்ள தேவையில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் விலை ஸ்திரப்படுத்தல் நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இந்த நிதியமானது உலகளாவிய எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் நுகர்வோர் மீது சுமத்தப்படும் சுமைகளை தடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எரிபொருள் விலையை எரிபொருள் விலை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் மூலம் தீர்மானிக்கப்படும் எனவும், அமைச்சர்களால் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி எரிபொருள் விலை ஸ்திரப்படுத்தல் நிதியத்தை நிறுவுவதற்காக அவர் முன்வைத்த முன்மொழிவு 2021 நவம்பர் 23 ஆம் திகதியே அங்கீகரிக்கப்பட்டது.

இந்த எட்டு மாத காலத்தில் உலகளாவிய எரிபொருள் விலைகள் 36% அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த 8 மாதங்களில் உலகில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்துள்ள நிலையில், இந்த நிதியம் நிறுவப்படும் போது மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: