எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் – எரிபொருட்களின் விலையும் இன்று அதிகாலைமுதல் அதிகரிப்பு – வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவிப்பு!

Sunday, June 26th, 2022

எரிபொருள் கப்பல் நாட்டிற்கு வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வார ஆரம்பத்திலும் அடுத்த வாரமும் வரவிருந்த பெட்ரோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் கப்பல்கள் மேலும் தாமதமடையும் என விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்டு தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

வங்கி நடைமுறைகள் மற்றும் ஏற்பாட்டுப் பணிகள் (logistics) காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த எரிபொருள் கப்பல் துறைமுகத்திற்கு வரும் வரை பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்தில் வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்பதால், எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ட்விட்டர் பதிவினூடாக இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

எரிபொருள் கப்பல்கள் வருகை தரும் திட்டவட்டமான  திகதிகளை அறிவிப்பதில் சிக்கல் நிலவுவதாக விநியோகஸ்தர்கள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அடுத்த மசகு எண்ணெய் கப்பல் வரும் வரை எரிபொருள் சுத்திகரிப்பு பணிகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே எரிபொருள் விநியோக தாமதம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு எரிசக்தி அமைச்சர் மன்னிப்புக் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) அதிகாலை 2.00 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 470 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாவாக விலைகளில் இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சியும் சிபெட்கோ விலை அதிகரிப்புக்கு நிகராக எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: