எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை மத்திய வங்கி ஏற்றுக்கொள்ளும் – மத்திய வங்கியின் ஆளுநர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு!

Saturday, January 29th, 2022

நாட்டில் அதிகரித்து வரும் டொலர் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை வழங்கும் பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்றுக்கொள்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மத்திய வங்கியின் ஆளுனர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தேவையான டொலர் தொகையை முன்கூட்டியே அறிவிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளாந்தம் மின்சாரத்தை துண்டிக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், மத்திய வங்கி வழங்கிய வாக்குறுதியின் பேரில் அந்த தீர்மானம் மீளப்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைத்தொழில் மற்றும் போக்குவரத்துக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் சுமார் 400 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும், மின்சாரத்திற்கான டீசல் மற்றும் எரிபொருளை வழங்குவதற்கு மேலும் 50 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன்படி, எரிபொருள் இறக்குமதிக்கு மாதாந்தம் சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், இது மாதாந்த ஏற்றுமதி வருமானத்தில் 45 வீதமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி வருமானத்தில் இவ்வளவு சதவீதத்தை எரிபொருளுக்காக செலவிடுவதால், எரிபொருள் பாவனையை குறைப்பதற்கு மாற்று நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

பாடசாலை சூழலை சுத்தமாக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை !
பெண் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டால் கடும் விளைவை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் -  எச்சரிக்கிறது ...
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை செய்தி தொடர்பாளர்களாக உதய கம்மன்பில மற்றும் ரமேஷ் பதிரன ஆகிய இரு அமைச்...