எம்.ஐ-17 உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்வதற்கு ரஷ்யாவிடம் இலங்கை பேச்சு!

Monday, February 11th, 2019

இலங்கை விமானப்படைக்கு எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்வது குறித்து, ரஷ்யாவுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறது.

ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி தயான் ஜெயதிலக இந்த தகவலை, ரஷ்ய நாளிதழான ஸ்புட்னிக்கிடம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அமைதிப்படையின் பணிகளுக்காக ரஷ்யாவிடம் எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளை வாங்குவது குறித்து குழுவொன்று கலந்துரையாடி வருகிறது என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இலங்கையின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மொஸ்கோவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்யும் விவகாரமே முக்கிய நிகழ்ச்சிநிரலாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

“பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்ற போதும், இன்னமும் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திடப்படவில்லை. அத்துடன் எத்தனை உலங்குவானூர்திகளை இலங்கை விமானப்படை கொள்வனவு செய்யப் போகிறது என்றும் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யத் தயாரிப்பான எம்.ஐ.17 உலங்குவானூர்திகளை இலங்கை விமானப்படை, 1993ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகிறது.

இரட்டை இயந்திரம் கொண்ட நடுத்தர வகை எம்.ஐ.17 உலங்குவானூர்திகள், சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து, தேடுதல் மற்றும் மீட்பு, பறக்கும் மருத்துவமனை, தீயணைப்பு போன்ற தேவைகளுக்காக பல்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.

100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இவை பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


மத்திய வங்கிக்கு புதிய நாணய நிதி சபை!
மாணவர்கள் மரணத்தைக் கண்டித்து யாழ். மாவட்டச் செயலகம் முற்றுகை!
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
1700 பல்கலைக்கழக வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க 23ஆம் திகதி வரை அவகாசம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் 60 ஆவது அகவை பூர்த்தியை முன்னிட்டு நல்லூரில் மாபெரும் சிரமதானம்...