எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோம் ௲ இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ஐ.நாவை தலையிட வேண்டாம் என்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் !

எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகளை தலையீடு செய்ய வேண்டாமென கோருவதுடன், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து கூறுகையில் –
இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை பக்கச் சார்பானது. ‘தருஸ்மன்’ அறிக்கையை அடிப்படையாக கொண்டதோர் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது. ‘தருஸ்மன்’ அறிக்கை பொய் காரணிகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டதென டெஸ்மன் சில்வாமுதல் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தின் விசாரணைகளில் பலர் கூறியுள்ளனர்.
இதனால் வெளியாகியுள்ள ஜெனீவா அறிக்கையை நாம் முற்றாக நிராகரித்துள்ளோம். ஆனால், கடந்தமுறை நாம் போர்க்குற்றங்களை புரிந்தோமென நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்தது. அந்த அறிக்கையை நாம் ஏற்றுக்கொண்டால் மனிதவுரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் ஒரு நாடு கூட எமக்கு ஆதரவாகச் செயற்படாது.
காரணம் அறிக்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் நாம் போர்க்குற்றங்களை புரிந்துள்ளோமென ஏற்றுக்கொள்வதற்கு சமமாகும். ஆனால், இம்முறை அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதுடன், நல்லாட்சி அரசாங்கம் வழங்கியிருந்த இணை அனுசரணையையும் மீளப் பெற்றுள்ளோம்.
அதன் காரணமாக பல நாடுகள் எம்முடன் கைகோர்த்துள்ளன. இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, மொன்டகிரினோ, மெசடோனியா போன்ற நாடுகள் இணைந்து இம்முறை ஜெனீவா மாநாட்டில் தீர்மானமொன்றை கொண்டுவர உள்ளதாக அறிய முடிகிறது
அவ்வாறனதொரு தீர்மானம் கொண்டுவரப்படும் பட்சத்தில் மனிதவுரிமைகள் பேரவை இரண்டாகப் பிளவுப்படும்.
ஆகவே, தீர்மானமொன்று இல்லாது இந்த விடயத்தை கையாள நினைக்கிறோம். என்றாலும் எமது நாட்டின் உள்ளக விவகாரங்கள், எவரும் தலையீடு செய்ய வேண்டாமென்பதுடன், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோம் எனத் தெரிவிக்க விரும்புகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|