எமது கல்விச் செயற்பாடுகளில் மும்  மொழிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்படுத்த வேண்டும்- யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  செந்தில் நந்தனன்

Tuesday, May 10th, 2016

எமது கல்விச் செயற்பாடுகளில் தமிழ், சிங்களம் , ஆங்கிலம் ஆகிய மும்  மொழிகளுக்கும் கல்வியியலாளர்கள் முன்னுரிமை கொடுத்துச் செயற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பி. செந்தில்நந்தனன்.

யாழ்ப்பாணம் இந்து பெளத்த கலாசாரப் பேரவையின் தேசிய இரண்டாவது மொழிக் கற்கை நிலையத்தில் இணைந்து கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தோருக்கான  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நீதியமைச்சின் செயலாளர் சட்டத்தரணி திருமதி. கிரிசாந்தி இனோக்கா தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மொழி என்பது மக்களுக்கான இணைப்பாகக் காணப்படுகின்றது. மொழியினூடாகப் பல்வேறு விடயங்களை நாங்கள் அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. எங்களுடைய நாட்டிலே பேசப்படுகின்ற இரு மொழிகளான தமிழ்மொழி , சிங்கள மொழி ஆகிய இரு மொழிகளையும் அறிந்திருந்தால் அபிவிருத்தி , கலாசார, மனித  மேம்பாடுகள் என்பவற்றைச் சிறப்பாகவும் , செம்மையாகவும் ஆற்ற முடியும்.

அந்த வகையில்  மொழியினுடைய அறிவை எமது இளம் சமூதாயத்தினர் புரிந்து கொள்ளும் வகையில் இந்த இரண்டாம் மொழிக் கற்கை நிலையம் சிறப்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது .

முன்னர் மொழியினுடைய தேவை உணரப்படாவிட்டாலும் தற்போது மொழியினுடைய தேவை நன்கு உணரப்பட்டுள்ளது.  வடபகுதி வாழ் தமிழ் மொழி பேசும் மக்கள் தென்பகுதிக்குச் செல்கின்ற போது சிங்கள மொழியின் தேவைப்பாடுகள், பயன்பாடுகள் தொடர்பில் உணரக் கூடியதாகவுள்ளது. அதிலும் குறிப்பாக நிர்வாக விடயங்களுக்கு சிங்களம் , தமிழ் ஆகிய இரு மொழிகளும் அவசியமாகவுள்ளன.

தமிழ் ,சிங்களம் ஆகிய மொழிகளைக் கற்பதுடன் நின்றுவிடாது மூன்றாவது மொழியான ஆங்கிலத்தையும் நாமனைவரும் கற்றிருக்க வேண்டும்.  மொழிகளை அறிந்து வைத்திருப்பதன் மூலம்  நாங்கள் பல பயன்களைப் பெற முடியும்.

நாங்கள் இன்று உலகளாவிய சிந்தனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . உலகளாவிய சிந்தனையில் ஆங்கில மொழியைத் தெரிந்து வைத்திருத்தல்  அத்தியாவசியமானது . ஆங்கில மொழியினூடாக எங்கள் தொடர்பாடல்களை விசாலாமாக்கிக் கொள்வதுடன் பல்வேறு தொழில் நுட்ப விடயங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

ஆகவே , எமது கல்விச் செயற்பாடுகளில் தமிழ், சிங்களம் , ஆங்கிலம் ஆகிய மும்  மொழிகளுக்கும் கல்வியியலாளர்கள் முன்னுரிமை கொடுத்துச் செயற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் எனவும் அவர் மேலும்  தெரிவித்தார்.

Related posts: