எமது இளைம் சமூதாயம் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆணி வேர் கண்டறியப்பட வேண்டும் : மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ .யூட்சன்

Wednesday, May 18th, 2016

தன்னுடைய சக நண்பனுக்காக உயிரை விட்ட எமது சமூதாய இளைஞன் இன்று தன் சக நண்பனையோ அல்லது தான் சார்ந்த சமூகத்தவனையோ வாளால் வெட்டுகின்ற நிலைமை. தன்னுடைய அயலவன் வீட்டில் கொள்ளையடிக்கின்ற நிலைமை. இந்த நிலைமை எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கிறது? எங்களுடைய இளைய சமூதாயம் ஏன்  இவ்வாறான சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் ? இதற்கான ஆணி வேர் என்ன ? போன்ற விடயங்களைக் கண்டறிந்து அதனை இல்லாமல் செய்வதற்கான கடப்பாடு எம்மனைவரிடமும் உண்டு. குறிப்பாக அதிபர்கள் , ஆசிரியர்களுக்கு நிச்சயமாக உண்டு எனத் தெரிவித்தார் மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ .யூட்சன்.

மானிப்பாய் சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை(14-05-2016)  காலை-9 மணி முதல் பிற்பகல் -12.30 மணி வரை “மனித வாழ்வில் விழுமியங்கள்” எனும் தலைப்பிலான கருத்தரங்கு இடம்பெற்றது. வடபிராந்திய சத்திய சாயி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து   கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் ,

யாழ்.குடாநாட்டில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்கள் எங்களுடன்  மிகவும் அக்கறையுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார் . அவருக்குப் பூரண ஒத்துழைப்புக்களை நாங்கள் வழங்கி வருகிறோம் . நிச்சயமாக யாழ். குடாநாட்டில் தொடரும் சமூக சீரழிவுகளை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு .

சாயி பாபாவின் போதனைகளில் கூட எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார்கள் . ஆனால், இன்று எமது இளைய சமூதாயம் ஒருவரை ஒருவர் அன்பு செய்கின்றார்களா ? அல்லது தன்னுடைய சக மனிதனை மதிக்கின்றார்களா ? என்கிற வினா எல்லோர் மனங்களிலும் இன்று எழுகிறது .

எல்லா நாடுகளிலும் செறிந்து வாழ்ந்த யூத  இனம் இஸ்ரேல் என்ற நாட்டை எவ்வாறு கட்டியெழுப்பியது ? என்பதை ஆராய்ந்து பார்த்தால் அவர்களின் அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டம் மூலமாகவே இது சாத்தியமானது. அந்த வகையில் யூத இனத்தின் அர்ப்பணிப்புக்கள் , தியாகங்களுக்கு இணையான அர்ப்பணிப்புக்களை வழங்கிய சமூதாயமாக எமது சமூதாயமுள்ளது .

ஒரு சமூதாயத்தின் மிக முக்கியமானதொரு அங்கம் பாடசாலை . அதிபர்கள் , ஆசிரியர்கள் சிறந்த சமூதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கான தூண்கள். இன்று எங்களுடைய சமூதாயத்திற்கு மாறான சட்ட ஏற்பாடுகள் கூட மேலைத்தேய நாடுகளிலிருந்து உள்வாங்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகப் பாடசாலை மாணவர்களைத்த் தண்டிக்க முடியாததொரு நிலை காணப்படுகின்றது . உண்மையில் நாங்கள் அடி வாங்கித் தான் படித்தோம் . நாங்களும் ஏனைய மாணவர்களைப் போலக் குழப்படிகள்  செய்திருக்கிறோம். ஆனால் , இவ்வாறான ரவுடித் தனங்களிலும் , சமூக விரோதச் செயல்களிலும் நாங்கள் ஈடுபடவில்லை.

மாணவப் பருவத்தில் அவனது வயதுக்கேற்ப அனைத்துக் குறும்புகளும் நிச்சயமாகவிருக்க வேண்டும் . அது இல்லாது போனால் அவன் மாணவனாக   முடியாது. ஆனால், இது எல்லை மீறிச் செல்வதை நாங்கள் அனுமதிக்கக் கூடாது என்றார்.

Related posts: