“எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே அறிவு”

Wednesday, March 22nd, 2017

“ராஜதந்திரியாக நடிக்கும் தயான் ஜெயதிலக ஈ.பி.டி.பியிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்” என்று யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது.

அந்தச் செய்தியானது எந்த வகையிலும் ஈ.பி.டி.பியுடன் தொடர்புபட்ட செய்தியல்ல. அந்த பத்திரிகை செய்தியின்படி 1980களில், தயான் ஜெயதிலக டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் ஆயுதப் பயிற்சி எடுத்தார் என்று எழுதப்பட்டிருக்கின்றது.

1980ஆம் ஆண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இருக்கவில்லை. 1987 ஆண்டுக்குப் பின்னரே ஈ.பி.டி.பியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. 1990ஆம் ஆண்டே ஈ.பி.டி.பி இலங்கையில் பதிவு செய்யப்பட்டது. எனவே 1980 களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் தயான் ஜெயதிலக ஆயுதப் பயிற்சி எடுத்தார் என்ற செய்தி தவறான செய்தியாகும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் –

ஒரு தவறான செய்தியை ஆராய்ந்து பார்க்காமல், ஈ.பி.டி.பி மீது அவதூறு  பரப்பும் நோக்கத்துடன் குறித்த பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது. கிடைக்கப்பெறுகின்ற தகவல் ஒன்று குறித்து ஆராய்ந்து மக்களுக்கு உண்மையைக் கூறவேண்டிய தார்மீகப் பொறுப்பை, இந்தப் பத்திரிகை பின்பற்றியதாகத் தெரியவில்லை.

மக்களுக்கு செய்திகளை வழங்குவதற்கு முன்னர் அச் செய்தியின் உண்மைத் தன்மை, அதனால் ஏற்படும் விளைவுகளின் சாதக, பாதகங்கள் தொடர்பாக ஆராய்ந்து சமூக அக்கறையுடனேயே ஊடகங்கள் செயற்பட வேண்டும். துரதிஷ்டவசமாக இந்தப் பத்திரிகையில் அவ்விதமான செயற்பாட்டை காணமுடியவில்லை.

வள்ளுவர் பெருந்தகை கூறியதுபோல் “எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே அறிவு” என்பதைப் போல், எங்கிருந்து எவ்விதமான தகவல் கிடைக்கப் பெற்றாலும், அதை ஆராய்ந்து அதன் உண்மை அறிந்து கூறுவதே தர்மத்தின் வழி நடக்கும் ஊடகத்தின் பொறுப்பாகும்.

கடந்தகாலத்தில் ஊடகம் யுத்தத்தின் போக்கையும், அதனால் ஏற்படப்போகின்ற அழிவுகளையும் பகுத்தறிந்து மக்களுக்கு கூறாமல், உண்மைக்குப் புறம்பாகவும், மிகைப்படுத்தியும் தவறான செய்தியை தமிழ் மக்களுக்கு வழங்கியதாலேயே எமது மக்கள் தம்மைச் சுற்றி ஆபத்து சூழ்வதை தெரிந்துகொள்ளாமல் இருந்ததால், உயிர் இழப்புக்களையும், உடமை இழப்புக்களையும் சந்திக்க நேர்ந்தது.

தமிழ் மக்களை, மரணக் குழிக்கு வழி காட்டிய ஊடகமே இன்று அஞ்சலி விளம்பரம் பிரசுரித்து பெருந்தொகை இலாபத்தை ஈட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களைப் பொறுத்தவரைதமிழ் மக்கள் துன்பத்திலிருந்தாலும்,துவண்டு மடிந்தாலும் இலாபமே என பதிவிடப்பட்டுள்ளது.

Related posts: