எந்தமுறையில் தெரிவானாலும் அனைவரும் உறுப்பினர்களே!

Sunday, March 11th, 2018

நடந்துமுடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் இரண்டாவது பட்டியலில் போட்டியிட்டு போனஸ் உறுப்புரிமையைப் பெற்றவர்கள் மேயராகலாமா, தவிசாளராகலாமா என்ற கேள்வி பலரிடையே நிலவுகின்றது.

நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டமுறைகளுக்கு அமைவாக எந்தமுறையில் தெரிவானாலும் அனைவரும் உறுப்பினர்களே என்பது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஒரே அதிகாரங்களைக்கொண்ட தராதரமுடைய உறுபபினர்களே.

ஓர் உள்ளுராட்சிசபையின் உறுப்பினர் இருவழிகளில் தேர்ந்தெடுக்கப்படலாம். முதலாவது, வட்டாரமுறையில் நேரடியாகத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் (Elected members). இரண்டாவது, விகிதாசாரமுறையில் நியமிக்கப்படுபவர்கள் (Returned members).

இரு சாராரும் சமஅந்தஸ்துடைய உறுப்பினர்களே. இவர்களுள் எந்த வேறுபாடோ, ஏற்றத்தாழ்வோ இல்லை.

2012 இன் 22வது சரத்து 65Bயின் படி, வட்டாரத்தில் தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு Elected என்ற பதமும் நியமிக்கப்படுபவர்களுக்கு Returned என்ற பதமும் பாவிக்கப்படுகின்றது.

ஆனால் இருசாராரும் தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பது யாமறிந்ததே. இவர்களுள் யாரும் மேயராக, பிரதி மேயராக, தவிசாளராக, பிரதி தவிசாளராக வரலாம். எந்தத்தடையுமில்லை.

சட்டம் சரத்து 16 of 2017யின்படி ஒவ்வொரு கட்சியும், சுயேட்சைக்குழுவும் உறுப்பினர்களைத் தெரிவதற்காக இருபட்டியல்களை தேர்தலுக்காக சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்போதே அவர்கள் தெரிவாகும் அல்லது நியமனமாகும் அங்கத்தவர் எனக்கூறப்படுகின்றது. இது தேர்தலுக்காக மட்டுமே.

ஆனால் அதன்பின்வரும் 66 B(1) சரத்தில் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களை ஆணையாளர் வர்த்தமானியில் பிரசுரித்ததன் பின்னர் 50வீதத்திற்கு மேல் ஆசனங்களைப்பெற்றிருந்தால் குறித்த கட்சி அல்லது சுயேட்சைக்குழு தனது அங்கத்தவர்களிடையே (members) இருந்து மேயரை அல்லது தவிசாளரைத் தீர்மானிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

இங்கு குறித்த கட்சியின் தெரிவான அங்கத்தவர்கள்(Elected members) மத்தியில் மட்டுமே மேயரைத் தெரிவு செய்யலாம் என்று குறிப்பிடுவதில்லை. மாறாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களிலிருந்து (Returned ) தெரிவு செய்ய முடியாது என்பதும் அர்த்தமல்ல.

எனவே தெரிவு செய்யப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட இருசாராரும் உறுப்பினர்களே. அவர்கள் யாரும் மேயராகவும் வரலாம். தவிசாளராகவும் வரலாம்.

கலப்புத்தேர்தல் முறைமை என்பதால் இருவகைப்பிரிப்பு இருக்கின்றதே தவிர அவர்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்கல்ல. அப்படி இரு வகுப்பினர் இருப்பின் மேல்சபை, கீழ்ச்சபை என்று சபையில் இருக்கவேண்டும்.

தேர்தலில் வட்டார வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பதல்ல மாறாக விகிதாசார வேட்பாளர்க்கும் சேர்த்தே மக்கள் வாக்களிப்பர். இங்கு விருப்பு வாக்குமுறைமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தெரிவாகும் உறுப்பினர் வேறு நியமிக்கப்படும் உறுப்பினர் வேறு என்று பாகுபடுத்துவதில்லை என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும்.

இருவருக்குமிடையே எந்த வேறுபாடுமில்லை. அனைத்து உறுப்பினருக்கும் ஒரே கொடுப்பனவு ஒரே சலுகை. ஒரே மரியாதை.ஒரே அந்தஸ்து, ஒரே உரிமை. எனவே மக்களிடையே குழப்பம் தேவையில்லை.

Related posts: