எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க அறிவிப்பு!

Wednesday, January 13th, 2021

எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக திறப்பதற்கு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நூற்றுக்கு 90 சதவீதமான நடவடிக்கைகள் பூர்தியாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த அமைச்சர் சில தினங்கள் இருக்கின்றமையினால், எஞ்சியுள்ள 10 சதவீத நடவடிக்கைகளையும் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சுற்றுலா பயணிகள், நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களை, நாட்டில் உள்ள பி.சி.ஆர் கொள்ளளவுக்கு ஏற்ற வகையில் நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பினால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், சர்வதேச ரீதியில் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு மற்றும் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள சுமார் ஆயிரத்து 200 சர்வதேச விமான நிலையங்களில் 197 விமான நிலையங்களுக்கு மாத்திரம் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மத்தள விமான நிலையத்திற்கும் இந்த சான்றிதழைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்ககது.

Related posts: