எதிர்வரும் 20ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரம்!

Tuesday, September 19th, 2017

டெங்குநோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1இலட்சத்து 51ஆயிரத்து 975 ஆகும். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390 என்றும் இதில் இறந்தவர்களில் 68 சதவீதமானோர் பெண்கள் எனவும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் தேசிய இணைப்பாளரும் விசேட வைத்தியருமான ஹசித்த திசேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது இவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இம்மாதம் 20ஆம் திகதிமுதல் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு வாரம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிப்பதற்காக இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு இடம்பெறுவதற்கு உரிய காரணத்தை கூறமுடியாது என்று குறிப்பிட்டார்.பெண்களின் மரணத்தின் காரணமாக அவர்களது குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று டொக்டர் ஹசித்த திசேரா சுட்டிக்காட்டினார்.

2017ஆண்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்பை குறைப்பதற்கு முடிந்துள்ளது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை இதற்கு பெரிதும் உதவியது.

நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் காண்பது மிகமுக்கியமானதாகும். மேல்மாகாணத்தில் 50 சதவீதமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நகர பிரதேசங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. நகர பிரதேசங்களில் சுற்றாடலை துப்பரவு செய்தலில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும். பாடசாலை மாணவர்களில் நகரப்பகுதிகளில் 30 சதவீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். உயிரிழப்பு 15 சதவீதமாகவே காணப்பட்டது.

விசேடமாக பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் டெங்கு நோய் ஏற்படுவதில் பொதுவான நிலமை காணப்படுகின்றது.இத்தொகை 55 முதல் 45 சதவீதமாக காணப்பட்டது. இருப்பினும் பெண்களின் மரண எண்ணிக்கை அதிகமாகும்.

இதனால் டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னெடுப்பதில் 3000 குழுக்கள் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடும். இதில் பணியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 9000 ஆகும். முப்படை, பொலிசார் ஆகியோரின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது. கடந்தமுறை 20 இலட்சம் சுற்றாடல் பகுதிககைள பரிசோதனைக்கு உட்படுத்த முடிந்துள்ளது .இதில் 20 சதவீதமானவற்றில் நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டன. இம்முறை 188 பிரதேச சுகாதார அதிகார பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் தேசிய இணைப்பாளரும் விசேட வைத்தியருமான ஹசித்த திசேரா தெரிவித்தார்.

Related posts: