எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கிலிருந்து ஆரம்பிக்கின்றது விவசாயப் புரட்சி – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!
Wednesday, September 9th, 2020உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றில் தன்னிறைவு காணும் விவசாய புரட்சியொன்றை வடக்கிலிருந்து ஆரம்பிக்க இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த வாரம் 15 ஆம் திகதி வடக்கிலுள்ள 400 விவசாய, அமைப்புகளை சந்தித்து தேவையான ஊக்குவிப்புகளையும் உதவிகளையும் வழங்கி விவசாயத்துறையில் தன்னிறைவு காண திட்டம் தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனுடன் இணைந்ததாக வடக்கிலுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள், அங்கவீனமுற்றோர். புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலி உறுப்பினர்கள் போன்றோருக்கு சுயதொழில் வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப காலத்தில் கிழங்கு, வெங்காயம். மிளகாய், பால் உற்பத்திகளில் வடபகுதி முன்னணியிலிருந்தது. யுத்தத்தின் பின்னர் பின்னடைவு ஏற்பட்டது. இன்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அநேக உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்து விவசாய புரட்சியொன்றை ஏற்படுத்த பிரதமர் எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனை வடக்கிலிருந்து ஆரம்பிக்குமாறும் அவர் கோரினார். இதற்கமையவே இந்தத்திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கில் ஆரம்பிக்கப்படுகிறது.
அங்குள்ள விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் விவசாய உற்பத்திகளை அதிகரிக்க தேவையான உதவிகளை வழங்கவும் இருக்கிறோம். பால் உற்பத்திகளும் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு பால் உற்பத்தியை மேம்படுத்தவும் விசேட திட்டம் முன்னெடுக்கப்படும்.
அடுத்து ஏனைய பிரதேசங்களிலும் இந்த விவசாய புரட்சி முன்னெடுக்கப்படும்.எதிர்வரும் 03 வருட காலத்தினுள் பல உணவுப் பொருட்களில் தன்னிறைவு காண திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.
Related posts:
|
|