எதிர்கால சந்ததியின் நன்மை கருதி எடுத்த தீர்மானத்தை ஒருபோதும் மாற்றமாட்டேன் –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!

Monday, June 28th, 2021

ஆரோக்கியமான எதிர்கால சந்ததியின் நன்மை கருதி, சேதனப் பசளையை பயன்படுத்துவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றப்பட மாட்டாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

சேதனப் பசளை பாவனை தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் போது, விவசாயிகளை சிரமங்களுக்குள்ளாக்க இடமளிக்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இரசாயன உர பாவனையினால் பல பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் சிறுநீரக நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் இரசாயன உர கொள்வனவிற்காக அரசாங்கத்தினால் வருடாந்தம் 400 மில்லியன் டொலர் செலவிடப்படுகின்றது.

இந்நிலையில், வெளிநாட்டு நிறுவனமொன்றினால் பெற்றுக்கொள்ளப்படும் பணத்தை, நாட்டின் விவசாயிகளுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பம் சேதனப் பசளை பாவனையூடாக கிடைக்குமென மகா சங்கத்தினருக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: