எச்சரிக்கை –  வடக்கில் எச்.ஐ.வி தொற்று மிக வேகமாக அதிகரிப்பு!

Thursday, November 30th, 2017

வடக்கு மாகாணத்தில் எச்.ஐ.வி தொற்று கடந்த காலங்களிலும் பார்க்க படிப்படியாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள மருத்துவ நிபுணர் பிரியந்த பட்டகல மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையின் தொற்று நோய் தடுப்புப்பிரிவின் பொறுப்புவைத்திய அதிகாரி ஆகியோர் தெரிவித்துள்ளார்.

யாராவது எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டிருந்தால் யாழ்.போதனா வைத்தியசாலையின் பாலியல் தொற்று நோய் தடுப்பு பிரிவிற்கு வருகைதந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆண்களிடையேயான ஓரின சேர்க்கையாளர் மூலமாகவே தற்போது இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தில் நேற்றைய தினம் காலை நடைபெற்ற பத்தரிரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இதுவரை 35 பேர் எச்.ஐ.வி தொற்றுடன் எமது சிகிச்சை நிலையத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

அவர்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளார்கள். இவர்களில் 25 பேர் எதுவிதமான வெளிநாட்டுத் தொடர்புகளும் அற்றவர்கள். இங்குள்ள நோயாளரகளுக்கு வைத்திய நிபுணர் பிரியந்த பட்டகள இங்கு தங்கியிருந்து சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றார். யாழ்ப்பாணத்தில் எச்.ஐ.வி தொற்றுக்கு உட்பட்டவர்கள் 80 பேருக்கு மேல் இருக்கலாம் ஆனால் அவர்கள் இது வரை எமது சிகிச்சை நிலையத்தை நாடவில்லை. இதே போன்று வவுனியாவைச் சேர்ந்த 6 பேர் அநுராதபுரம் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்கு காய்ச்சலும் சளியும் ஏற்படும். சில வேளைகளில் அந்தக் காய்ச்சல் மாறிவிடும். எனினும் இரண்டு வாரங்களில் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை எம்மால் கண்டறியமுடியாது. இரண்டு மாதங்கள் கழித்தே உறுதிப்படுத்த முடியும். எனினும் ஆரோக்கியமான ஒருவர் பத்து வருடங்களோ அல்லது பன்னிரண்டு வருடங்களோ அறிகுறி எதுவும் இல்லாமல் இருக்கமுடியும். எனினும் 14 வருடங்களின் பின்னர் அனைத்து நோய்களும் பீடிக்கும், தோல் வருத்தம் வயிற்றோட்டம், சடுதியான நிறை குறைவு ஆகியன ஏற்படும்.

எமது நாட்டில் 4200 பேர் வரையில் எச்.ஐ.வி தொற்றுடன் காணப்படமுடியும் என கொகையிடப்பட்டுள்ளது. இவர்களில் 2500 பேரே கண்டறியப்பட்டுள்ளார்கள். ஏனையவர்கள் பிறருக்கு தொற்றும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கலாம். ஆகவே எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் இருந்தால் யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள பாலியல் தொற்று நோய்ப் பிரிவிற்கு சென்று இலவசமாக பரிசோதிக்க முடியும். இந்தப் பரிசோதனை முடிவுகள் யாரிடமும் கூறப்படமுடியாது.

பரவும் வழிகள்  எச்.ஐ.வி தொற்று பெரும்பாலும் உடலுறவால் தான் ஏற்படுகிறது. இவற்றில் ஆண் பெண் உறவினால் தான் கடந்த காலங்களில் இந்தத் தொற்று பெருமளவில் ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது தன்னின சேர்க்கையாளர்களிடையே மிக வேகமாகப் பரவிவருகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் 1.4 ஆண்களுக்கு 1 பெண் என்ற விகிதாசாரத்தில் இருந்த எண்ணிக்கை தற்போது 1.9 ஆண்களுக்கு 1 பெண் என்ற விகிதாசாரத்தில் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கையிலள்ள சில மாவட்டங்களில் எச்.ஐ.வி தொற்றுடைய ஆண்களை பரிசோதனைக்குட்படுத்தி அவர்களுடைய தொடர்புகளை ஆராய்ந்த போது அவர்களும் ஆண்களாகவே எச்.ஐ.வி தொற்றுடையவராகவே உள்ளனர். ஓரினச் சேர்க்கை ஆண்களிடையே எச்.ஐ.வி தொற்று இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் மிக வேகமாக பரவிக்கொண்டுவருகின்றது.

எச்.ஐ.வி தொற்றுடைய குருதியை இன்னொருவருக்கு ஏற்றும் போதும் பிறருக்கு இந்த தொற்று ஏற்படுகின்றது. எனினும் இலங்கையில் இந்த முறையிலான தொற்று ஏற்படுவது மிக மிக குறைவு. மிகவும் கவனமான முறையிலேயே இரத்தம் பரிசோதிக்கப்பட்டு மற்றவருக்கு ஏற்றப்படுகின்றது. அம்மாவிடமிருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி தொற்று பரவலாம். இதனைத் தடுப்பதற்கு இலங்கையிலுள்ள அனைத்து கர்ப்பவதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். என்றார்.

Related posts: