எங்களுடைய தலைவர்களின் ஊக்குவிப்பின் காரணமாக இளைஞர்கள் தண்டத்தைக் கையிலெடுத்தார்கள் – கம்பவாரிதி ஜெயராஜ்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/06/2a0ec47d-b77d-4f84-8241-e1d06b626056-copy.jpg)
எங்களுடைய அரசியல் கெட்டித் தனங்களால் ஒரே வேலையைத் தான் எல்லோரும் செய்தார்கள். ஆனால், நன்மை தீமை ஆகியன தொடர்பில் எமது வரைவிலக்கணம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டேயிருக்கின்றது. தவறுகள் இங்கு நிகழ்ந்தது உண்மை. புலிகளையும் சேர்த்துத் தான் நான் சொல்லுகின்றேன் என கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்தார் .
அகில இலங்கைக் கம்பன் கழகம் நடத்தும் ‘வித்தகம்’ நிகழ்வு நேற்று முன்தினம் நல்லூர் கம்பன் கோட்டத்தில் இடம்பெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் –
நான் சபையில் வெளிப்படையாகச் சொல்வதற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். குறித்த தலைவர்கள் உத்தமர்கள், குறித்த தலைவர்கள் அதமர்கள் என்ற பதிவு நம் புத்திக்குள்ளே வைக்கப்பட்டு விட்டது. இவன் இந்த இயக்கத்திலே இருந்தவன். அவன் வேறொரு இயக்கத்திலே இருந்தவன். இவன் மிதவாதி. அவன் தீவிரவாதி என அடையாளப்படுத்தியுள்ளார்கள். என்னைப் பொறுத்தவரை நான் நினைக்கின்றேன். குற்றம் சாட்ட வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ஒரு தலைவர்களும் மிஞ்சமாட்டார்கள். அவன் மிதவாதியாகவிருந்தால் என்ன? தீவிரவாதியாகவிருந்தால் என்ன? மக்களுக்குத் துரோகம் செய்பவன் என வைத்துக் கொண்டு குற்றச்சாட்டுப் பெறப்பட்டால், பழைய வரலாற்றை நாம் கிழறத் தொடங்கினால் இன்றைய தலைவர்கள் ஒருவரையும் நீங்கள் நூறு வீத சுத்தமான ஆள் என்று சொல்ல முடியாது என்பதை நான் அடித்துச் சொல்வேன்.
இந்த இலங்கை மண்ணிலே தமிழர்கள் சுய உரிமையுடன் வாழ்ந்தவர்கள். அதனை யாருமே மறுக்க முடியாது. வெள்ளைக்காரர்கள் செய்த சூழ்ச்சியினால் அவை யாவும் மறைக்கப்பட்டது. அந்த வகையில் எமக்கு உரிமை உண்டு. ஆனால், நாம் குறைந்தவர்களாக இருக்கிறோம் என்பதற்காக மட்டுமே நம்முடைய உரிமையைப் பறிக்கலாம் என்கிற நினைப்பு இருந்ததே அது பெரிய தவறு. ஒரு பேரினத்துடன் சிற்றினமாகிய நாங்கள் மோதினோம்.
நம் பெரியவர்கள் சாம, பேத , தான, தண்டம் எனப் போர்முறையை நான்காக வகுத்தார்கள். சமாதானப் பேச்சுவார்த்தையும் போர்முறையில் ஒன்று எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார். ஏனெனில், வெற்றி நோக்கிய நகர்வுகளில் அதுவுமொன்று. தண்டம் பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதால் தான் அது இறுதியாகச் சொல்லப்பட்டுள்ளது. அவசரப்பட்டு எங்களுடைய தலைவர்களின் ஊக்குவிப்பின் காரணமாக எமது இளைஞர்கள் தண்டத்தைக் கையிலெடுத்தார்கள்.
அன்று இருந்த பிராந்திய அரசியல் சூழல், உலகியல் அரசியல் சூழல் நம்மைப் பலப்படுத்தியது. ஆனால், இடை நடுவில் அந்த அரசியல் சூழல்கள் மாறுபட நாம் வீழ்ந்து போனோம். தோற்றுப் போனோம் அல்ல….வீழ்ந்து போனோம். அந்த வீழ்ச்சிக்குப் பின்னால் உலக நாடுகள் பல இருந்தன. வீழ்ந்து போய் நாம் பேரழிவைச் சந்தித்து விட்டோம். நாற்பதாயிரம் பேரிலிருந்து இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழப்புச் சொல்லப்படுகிறது. இதில் காணாமற்போனோர் தொகை பெரியளவில் சொல்லப்படுகிறது. யுத்தத்தால் நாம் பலவற்றை இழந்து விட்டோம் என்பது உண்மையா? இல்லையா? எப்படி இழந்தோம்? யாரால் இழந்தோம்? ஏது இழந்தோம்? என்ற கேள்விகளை விட்டுவிட்டு நாங்கள் இழந்தது என்பது மாத்திரம் உண்மை என மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|