எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய் கசிவு என வெளியாகும் சேய்தி உண்மைக்கு புறம்பானது – இராஜாங்க அமைச்சர் நாலக்கே கொடஹேவா தெரிவிப்பு!

Friday, June 11th, 2021

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றிய எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலில் இருந்து பெருமளவிலான எண்ணெய் கசிவு ஏற்படுவதாக சர்வதேச செய்திச் சேவை ஒன்று வெளியிட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது என இராஜாங்க அமைச்சர் நாலக்கே கொடஹேவா தெரிவித்துள்ளார்.

கடலில் மூழ்கும் அந்தக் கப்பலுக்கு அருகில் இலங்கை கடற்படையினர் மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் இருக்கின்றார்கள். அவர்கள் இவ்வாறான கசிவு குறித்து எந்தவித தகவல்களையும் இதுவரை அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதனை மிகவும் சரியாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கப்பல் மூழ்கும் இடத்திற்கு விசேட சுற்றுச்சூழல் ஆய்வாளர்களை அனுப்புவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக கடல்சார் மாசுபாட்டை கண்காணிக்கும் கடல் மாசு கண்காணிப்பு அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிவதற்காக தமது குழுவொன்று, கப்பலின் அமைவிடத்துக்கு சென்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், கப்பல் அமைவிடத்திலுள்ள கடல்நீர் மாதிரிகளை ஆய்வுக்காக பெற்றுக் கொள்ளும் பொருட்டு இக்குழுவினர் குறித்த இடத்துக்கு சென்றுள்ளதாக அவ்வதிகார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: