ஊர்காவற்துறை மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைகளின் கட்டட தேவைப்பாடுகளுக்கு இவ்வாண்டில் முன்னுரிமை – வடக்கின் ஆளுநர் தெரிவிப்பு!

முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விசேடமாக கண்காணிக்குமாறு சுகாதார பணிப்பாளர் மற்றும் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ள வடக்கின் ஆளுநர் திருமதி சார்ள்ஸ் வைத்தியர் ஓய்வு விடுதி, தாதியர் ஓய்வு விடுதி மற்றும் நோயாளர் விடுதி அமைக்கப்படுகின்ற போது தற்போதைய அவசர தேவைப்பாட்டின் அடிப்படையில் குறிப்பாக தெல்லிப்பழை மற்றும் ஊர்காவற்துறை பிரதேசங்களின் வைத்தியசாலைகளின் கட்டட தேவைப்பாடுகளுக்கு இவ்வாண்டில் முன்னுரிமை வழங்கி திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு நடைபெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயல மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்குறித்த கலந்துரையாடலின்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவதுறை தொடர்பில் ஆராயப்பட்டபோதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
அரச சார்பற்ற நிறுவனங்களினால் வடக்கு ஆசிரியர் வாண்மை விருத்தி பயிற்சிகளுக்காக பெருமளவு பணம் செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டிய ஆளுநர் அவ்வாறான பெருந்தொகை பணம் செலவிடவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்ததுடன் குறித்த நிதியை விசேட தேவையுடைய குழந்தைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கியிருந்தார்.
மேலும் மின்னணு பரிவர்த்தனை சட்டம் 2006 இல 19 மற்றும் அதன் திருத்தம் 2017 இல 25 இன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக கொவிட்-19 இடர் காலத்தில் அனைத்து அரச நிறுவன நடவடிக்கைகளையும் மின் ஊடகத்தின் மூலமாக தடையின்றி முன்னெடுக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் இவ்வருடத்திற்கான திட்டங்களை ஒக்டோபர்மாதத்தற்கு முன்னர் மேற்கொண்டு நிதி ஒதுக்கீடுகளினை பெற்றுக்கொள்ளுமாறும் அளுநர் துறைசார் தரப்பினரிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தற்போதைய பயணத்தடை காலப்பகுதியில் கட்டட வேலைகளுக்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் கட்டட ஒப்பந்தக்காரர்கள் சிரமங்களை எதிர் கொள்வதால் வேலைகள் தாமதமடைவதாக சுட்டிக் காட்டப்பட்டதனை தொடர்ந்து, குறித்த கட்டட வேலைகளுக்கான மூலப்பொருட்களினை பெற்றுக்கொள்ளும் வர்த்தக நிலையங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம் ஒப்பந்தக்காரர்கள் மூலப்பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி வழங்குமாறும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். குறித்த கலந்துரையாடலில் வடக்கின் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|