ஊடகவியலாளர் ஹம்சனின் யூகச் செய்தி அவதூறு சுமத்தும் உள்நோக்கம் கொண்டதாகும் – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

Friday, June 8th, 2018

யாழ்ப்பாணம், மற்றும் கொழும்பு தினக்குரல் பத்திரிகையில் எனது கட்சியையும் என்னையும் தொடர்புபடுத்தி அவதூறான வகையில் வெளியான செய்தியின் உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

நான் யாரையும் அச்சுறுத்தவும் இல்லை அல்லது சிவாஜிலிங்கம் போன்றோர் எப்போதாவது தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ வெளிப்படுத்தவும் இல்லை. அவ்வாறான சம்பவத்திற்கும் எனக்குமோ, எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்குமோ எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

யாழ் தினக்குரல் பத்திரிகையில் – 05.06.2018 ‘ஊர்காவற்றுறைக்கு வந்தபோது நடந்தது தெரியுமா?” என்றும் கொழும்பு தினக்குரல் பத்திரிகையில் – 07.06.2018 “சிவாஜிலிங்கத்திற்கு அச்சுறுத்தல் விடுத்த ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர்” என்ற தலைப்புகளில் வெளியான செய்திகள் எமது கட்சியையும் என்னையும் திட்டமிட்ட வகையில் அவதூறு செய்வதற்காக பிரசுரிக்கப்பட்டதாகவே கருதமுடிகின்றது.

கடந்த 04.06.2018 அன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்போது நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மறைத்து திட்டமிட்ட வகையில் செய்தியாளர் ஹம்சன் என்பவரால் குறித்த செய்தி எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த செய்தியை செய்தியாளர் ஹம்சன் மற்றும் பத்திரிகை நிறுவனம் ஆகியோர் எனதும் எனது கட்சியின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டதுமட்டுமன்றி எனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாகவே பிரசுரித்துள்ளார் என நான் கருதுகின்றேன். குறித்த செய்தியாளரின் பொறுப்பற்ற செயலைக் கண்டிக்கின்றேன்.

ஆகவே குறித்த செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன் இவ்விதமான உண்மைக்கு புறம்பான செய்தியை பிரசுரித்த செய்தியாளரது தவறு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் குறித்த செய்தியின் தவறை திருத்தி உண்மை தன்மை மீள் பிரசுரம் செய்யவேண்டும்.

ஊடகங்கள் உண்மையான செய்திகளையும், சரியான செய்திகளையும் மக்களுக்குச் சொல்வதை நாம் என்றும் வரவேற்கின்றோம். அதேவேளை உண்மைக்குப் புறம்பான செய்திகளையும், மக்கள் மத்தியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளையும் ஊடகங்கள் வெளியிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்பதை நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: