உள்ளூர் விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வலியுறுத்து!

Tuesday, August 25th, 2020

வலுவானதொரு உள்ளூர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக விவசாய விளைச்சலை அதிகரிக்கும் சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றினால் வீழ்ச்சியடைந்து வரும் ஏனைய நாடுகளின் பொருளாதாரங்களை கண்காணிப்பதன் முக்கியத்துவத்தையும், உள்ளூர் விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையயாடலின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஆண்டுக்கான உருளைக்கிழங்கு அறுவடை 80,000 டொன் ஆக காணப்படுகின்ற போதிலும், நுகர்வோர் தேவை 250,000 டொன் ஆக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  உருளைக்கிழங்கை இறக்குமதி செய்யாது  உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர மற்றும் உரிய அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: