உள்ளூராட்சி தேர்தலை அரசு அறிவித்திருப்பதுபோல் குறித்த காலத்தில் நடத்த வேண்டும் –  ஊடக சந்திப்பில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்

Thursday, November 9th, 2017

எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது அறிவிக்கப்பட்டது போல குறித்த காலப்பகுதியில் நடத்தப்படவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (09) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் ஆகியோரால் ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. இதில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மக்களுக்கான அடிப்படை தேவைகளை மேற்கொள்ளும் முக்கிய பங்கை வகிக்கும் உள்ளூராட்சி மன்றங்கள் தற்போது செயலற்ற நிலையில் இருப்பதனால் மக்களின் இயல்பு வாழ்வு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பிரதேசங்களின் அபிவிருத்திகளும் முடக்கப்பட்டு கிடக்கின்றன.

அந்தவகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலம் தாழ்த்தாது நடத்தப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதை எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்திலும் பலதடவைகள் வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆகவே தற்போது அரசினால் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் குறித்த காலத்தில் நடத்தப்படவேண்டும். இதனூடாகவே பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட பல தேவைப்பாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். – என்றார்.

Related posts: