உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்களுடன் அரசிதழ் இன்று!

Thursday, March 15th, 2018

கண்டி மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ் இன்று வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ண ஜீவன் கூல் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ் கடந்த 9 ஆம் திகதி வெளியாகும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார். அரசியல் கட்சிகள் விகிதாசாரப் பட்டியலைச் சமர்ப்பிக்காததால் தாமதம் ஏற்பட்டிருந்தது. கடந்த திங்கட்கிழமை அரசிதழ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசிதழ் வெளியாகவில்லை.

இது தொடர்பில் கேட்டபோது இன்றைய தினம் (நேற்று) பெயர்களை ஒப்புநோக்கும் பணி இடம்பெறுகின்றது. வியாழக்கிழமை அரசிதழ் வெளியாகும். கண்டி மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை நாளை வெளியாகும் அரசிதழில் உள்ளடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டப் பெயர்ப் பட்டியல் இணைப்பு அரசிதழாகவே பின்னர் வெளியிட வேண்டியிருக்கும்.

கம்பகா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பட்டியல் கிடைப்பதற்கு ஏற்பட்ட தாமதத்தாலேயே அரசிதழை உரிய திகதியில் வெளியிட முடியாமல் போனது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ண ஜீவன் கூல் தெரிவித்தார்.

Related posts: