உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வாரம் வழங்க பிரதமர் பரிந்துரை!

Tuesday, July 14th, 2020

உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்காக வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்த திணைக்களத்தின் தொழிற்சங்கம் மற்றும் பிரதமருக்கு இடையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவுக்கு பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் வாரத்திற்குள் உள்நாட்டு வருவாய் இலக்கை முழுமைப்படுத்துவதற்காக திணைக்களத்தின் ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்கள் சேவையை நிறைவேற்றுவதற்கு தேசிய வருவாய் திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை,  அரசாங்கம் என்ற ரீதியில் மதிப்பளிப்பதாக பிரதமர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்- 19 நெருக்கடியின் போதும் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடு தொடர்பில் திணைக்கள ஊழியர்களுக்கு கௌரவம் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக  தேசிய வருவாய் திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜே.டீ.சந்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: