உளவளத்துணை டிப்ளோமாதாரிகளும் நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் –  கல்வியமைச்சிடம் கோரிக்கை!

Thursday, April 19th, 2018

உளவள ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பில் பட்டதாரிகள் மாத்திரமின்றி உளவளத்துணை டிப்ளோமாதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஏ.பி.கமர்டீன் மேலும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்ததாவது:

உளவள ஆலோசனையாளர், உளவள ஆலோசனை உதவியாளர் என்ற உளவளத்துறை சார்ந்த பதவி நியமனங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படும்போது உளவளத்துறையில் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ள உளவளத்துணை டிப்ளோமாதாரிகளையும் உள்வாங்குவதற்கான நியாயங்களை முன்வைத்து பல முறை எமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் இக் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இலங்கையின் சனத் தொகையில் 2.3 வீதமானோர் உளப் பிரச்சினையுடன் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டில் நிகழுகின்ற வன் செயல்கள், துஸ்பிரயோக நடவடிக்கைகள் மற்றும் தற்கொலைகள் போன்ற சமூக பிரச்சினைகளில் உளப் பாதிப்புக்களும் குறித்த வகிபங்கினை வகிக்கிறது.

மாணவர்களின் ஒழுக்கமற்ற நடத்தைகளிலும் உளப் பிரச்சினைகள் கணிசமான பங்கினை செலுத்துகின்றன. இவ்வாறான நிலையில் குறித்த நபர்களுக்கு தொழில் வாண்மை உளவளத்துணையாளர்களின் உதவி இன்றியமையாததாகவுள்ளது.

இவ்வாறு பல்வேறு மட்டங்களில் பல்வேறு தரப்பினருக்கு உளவள ஆலோசனை வழங்க வேண்டிய தேவை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இவற்றைக் கருத்திற்கொண்டு சமூக சேவைகள் அமைச்சு, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு, சுகாதார அமைச்சு என்பவற்றினால் பல்வேறு அரச நிறுவனங்களில் உளவள ஆலோசகர்களும் உளவள உதவியாளர்களும் என பல்வேறு நியமனங்கள் உளவளத்துறையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாடசாலைகளில் உளவள ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

அதனால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உளவளத்துணையில் டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்து தொழில் வாய்ப்பின்றியுள்ள டிப்ளோமாதாரிகளின் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு உளவள ஆலோசகர் மற்றும் உளவள உதவியாளர் நியமனங்களுக்காக பட்டதாரிகளை மாத்திரமின்றி டிப்ளோமாதாரிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.