உலக வங்கியின் நிபந்தனையால் பணிகள் மேலும் தாமதமாகலாம்!

Friday, July 7th, 2017

யாழ்ப்பாணம் – பொன்னாலை, கொடிகாமம் – பருத்தித்துறைச் சாலைகளை அகலிப்புச் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகலிப்பின் போது பிரதேச பொதுமக்கள் காணிகளை இழக்கும் நிலை ஏற்படும். அந்த மக்களுக்கு இழப்பீடு வழங்கிய பின்னரே, அகலிப்புப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று உலக வங்கி வலியுறுத்தியுள்ளதால் இந்த நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதி உதவியில், யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் பொன்னாலை – பருத்தித்துறை சாலையும், கொடிகாமம் – பருத்தித்துறை சாலையம் அகலிப்புச் செய்யப்படவுள்ளன.

முதற்கட்டமாக சாலைகளை அகலமாக்குவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சாலை அகலிப்பு நடவடிக்கைகளின் போது, மக்களின் ஒப்புதல் கடிதங்களை பெற்றுச் சாலைகள் அகலிக்கப்பட்டன. தற்போதும் அதே போன்றதொரு நடவடிக்கையைப் பின்பற்றினால்,  சாலை அகலிப்பு வேலைகளை வேகமாக முன்னெடுக்கலாம். என்ற அடிப்படையில், திட்டத்தைச் செயற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சாலை அகலிப்பினால் காணிகளை இழக்கும் மக்களுக்கு இழப்பீடுகளை வழங்கிய பின்னரே சீரமைப்புப் பணிகளை ஆரமம்பிக்க வேண்டும் என்று கடுமையான நிபந்தனையை உலக வங்கி விதித்துள்ளது. இதனால் அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் அளவிலேயே சீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: