உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இன்று ஜனாதிபதி தலைமையில் தேசிய நிகழ்வு!

Monday, March 13th, 2017

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று13) மாத்தளை நாமினி ஓயா மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கான சுகாதாரமான வாழ்க்கை முறை’ எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு அமைவாக சிறுநீரக நோய் நிவாரணம் தொடர்பாக பாடசாலை மாணவர்களையும், பொது மக்களையும் தெளிவூட்டும் பல நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வில்கமுவ மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படும் சிறுநீரக சிகிச்சைப் பிரிவும் இதனோடு இணைந்ததாக ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படும்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அண்மைக்காலம் முதலே இதைப்பற்றி பேசப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சிறுநீரக தின நிகழ்வுகளைச் செயற்படுத்துவதன் மூலம் மக்களை தெளிவூட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தற்போது சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களிடமும் இதன்போது வேண்டுகோள் முன்வைக்கப்படும்.

தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சினைகளுள் ஒன்றாக சிறுநீரக நோயை இனங்காணலாம். விசேடமாக இரசாயனப் பசளை பாவனையுடன் விவசாயம் செய்யப்படும் வடமத்திய மாகாணத்திலும், ஏனைய மாகாணங்களிலும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மனித வாழ்விற்கு அச்சுறுத்தலாகக் காணப்படும் இந்த சிறுநீரக நோய் நிவாரணம் தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.; அதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியினூடாக சிறுநீரக நோய் நிவாரணம் தொடர்பான பல செயற்திட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts: