உலகெங்கும் இன்று சமாதான தினம் அனுஷ்டிப்பு!

Wednesday, September 21st, 2016

இன்று உலக சமாதான தினம். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி உலக சமாதான தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் இத்தினம் உலகின் பல பாகங்களிலும் சமாதானத்தை வலியுறுத்தி அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் மாதம் 21ம் திகதியை உலக அமைதி தினமாகப் பிரகடனப்படுத்தி இருக்கின்றது. 1981 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற இத்தினம் வருடா வருடம் ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்படி இவ்வருட உலக அமைதி தினத்திற்கான தொனிப்பொருள்’நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் – சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான முன்னெடுப்புக்கள்’ என்பதாகும். உண்மையில் ஐ.நா. சபையின் இந்நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவே ஐ.நா சபை 1948 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.

1914 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 28 ஆம் திகதி முதல் 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையான சுமார் நான்கு வருடங்களும் நான்கு மாத காலப் பகுதியில் இடம்பெற்ற முதலாம் உலகப் போரில் 9 மில்லியன் போராளிகளும், 7 மில்லியன் பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

அதேபோன்று 21 வருடங்கள் கடந்த நிலையில் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 திகதி வரையான சுமார் ஆறு வருட காலப் பகுதியில் இடம்பெற்ற இரண்டாம் உலகப் போரில் படையினர், பொதுமக்கள் அடங்கலாக 11 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 90 இலட்சம் பேர் வேண்டுமென்றே கொல்லப்பட்ட சிறுபான்மையினராவார். அத்தோடு 50- 85 மில்லியன்களுக்கு இடைப்பட்டோர் பல்வேறு விதமான காயங்களுக்கும் உள்ளாகினர். அதேநேரம் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகஷாக்கி நகர்கள் மீது அணுகுண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு மனிதப் பேரவலமே தோற்றுவிக்கப்பட்டது.

இந்த இரண்டு உலகப் போரிலும் மனித சமுதாயம் எதிர்கொண்ட பேரழிவு 20 ஆம் நுற்றாண்டு வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது. இவ்வாறான ஒரு போருக்கு மீண்டும் இம்மனித சமூகம் முகம்கொடுத்திடக் கூடாது. அதற்கான பிரதான ஏற்பாடாகவே ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. ஐ.நா. சபை உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் ஏழு தசாப்தங்களாகியும் மற்றொரு உலகப் போர் தோற்றம் பெற அது இடமளிக்கவில்லை.

என்றாலும் நாடுகளுக்கு மத்தியிலும், நாடுகளுக்குள்ளும் பல்வேறு யுத்தங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த யுத்தங்களால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வகையில் சிரியா, யெமன், லிபியா பொன்ற நாடுகளில் தினமும் பலர் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஐ. எஸ். போஹோஹரம் போன்ற பயங்கரவாத அமைப்புக்களின் மிக மோசமான செயற்பாடுகளாலும் அநேகர் கொல்லப்படுகின்றனர்.

இதேநேரம் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலும், வடகொரியா தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலும் முரண்பாடுகள் நிலவி வருகின்றன. இவ்வாறான முரண்பாடுகளையும், ஆயுதமோதல்களையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் உலகில் அமைதியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அதனால் முரண்பாடுகளிலும் ஆயுத மோதல்களிலும் ஈடுபட்டுள்ள தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாட்டையும், சகவாழ்வையும் கட்டியெழுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் ஐ. நா. அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

அதனால் தான் யுனெஸ்கோ அமைப்பு தனது முகப்பு வாசகத்தில், ‘மனித உள்ளங்களில் தான் போருக்கான காரணங்கள் தோற்றம் பெறுகின்றன. அதனால் அந்த உள்ளங்களில் அமைதிக்கான அரண்கள் அமையப் பெறல் வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதுதான் உண்மை. மனிதனின் உள்ளத்தில் அமைதி சமாதானம் ஏற்பட்டால் தான் குடும்பத்திலும், சமூகத்திலும், பிராந்தியத்திலும் மாத்திரமல்லாமல் முழு உலகிலுமே அமைதி ஏற்படும். அதன் காரணத்தினால் மனித உள்ளங்களில் அமைதியை எற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை பரவலாக உணரப்பட்டிருக்கின்றது.

சுமார் மூன்று தசாப்த காலம் நீடித்த உள்நாட்டுப் போர் முடிவடைந்து தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் சகவாழ்வு ,நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையின் ஊடாக நாட்டில் அமைதி, சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு பலவித வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இவற்றுக்கு உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இவற்றை நிலைபேறான தன்மையாக்குவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகில் எல்லோருக்குமே அமைதி சமாதானமே மிக அவசியமானது. அதனையே எல்லா மக்களும் எதிர்பார்த்திருக்கின்றனர். ஆகவே யுனெஸ்கோ நிறுவனத்தின் முகப்பு வாசகத்தில் குறிப்பிட்டுள்ளபடி உள்ளங்களில் அமைதிக்கான அரண்கள் அமையப் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதே இன்றைய உடனடித் தேவையாகும். இதனூடாகவே அமைதி, சமாதானம், சுபீட்சம் மிக்க வளமான வாழ்வை மனித சமூகத்தினால் அமைந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

21st-September-International-Day-of-Peace-There-Is-No-Way-To-Peace.-Peace-Is-The-Way

Related posts: