உலகக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து!

Monday, July 15th, 2019

2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் முதன் முறையாக இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.

2019 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்பில் ஹென்றி நிக்கோல்ஸ் 55 ஓட்டங்களையும், லத்தம் 47 ஓட்டங்களையும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 242 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 241 ஓட்டங்களைப் பெற்றதில் போட்டி சமநிலை அடைந்தது.

அதன் பின்னர் சூப்பர் ஓவர் அடிப்படையில் வெற்றியாளர்களை தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் 15 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியும் 15 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதில் சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்தது.

அதன் அடிப்படையில் இரு அணிகளும் அடித்த பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்று இம்முறை உலகக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

இங்கிலாந்து அணி முதல் முறையாக உலக கிண்ணத்தை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts: