உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் – நேபாளம்!

ஒத்திவைக்கப்பட்ட சார்க் மாநாட்டை நடத்த உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என நேபாளம் தெரிவித்துள்ளது.
19வது சார்க் மாநாடு வருகிற நவம்பர் 9 மற்றும் 10 திகதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே, உரி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது.
இதற்கான ஆதாரங்களையும் சர்வதேச நாடுகளிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் நடக்கும் சார்க் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டது. இந்தியாவை தொடர்ந்து பங்களாதேஷ், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதையடுத்து மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 19வது சார்க் மாநாட்டை நடத்துவதற்கு உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என நேபாளம் கேட்டுக்கொண்டுள்ளது. நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரகாஷ் சரண் மகத் கூறுகையில், “19வது சார்க் மாநாட்டை நடத்துவதற்கான நடவடிக்கைகளை நேபாளம் மேற்கொள்ளும். இது தொடர்பாக உறுப்பு நாடுகளுடன் ஆலோசனை செய்யப்படும். அனைத்து உறுப்பு நாடுகள் பங்கேற்புடன் மாநாட்டை நடத்துவதை உறுதி செய்வோம். பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு சார்க் மாநாடு அவசியமாகும்” என்றார்.
Related posts:
|
|