உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ள இருவர் மறுப்பு!

Sunday, October 2nd, 2016

தகவலறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆணைக்குழுவுக்கு ஐவருடைய பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

தொழில் அமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த கம்மன்பிலவை இந்த ஆணைக்குழுவின் தலைவராகவும், சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்த்தன, முன்னாள் நீதிபதி சாலிம் மர்சூப், எஸ்.ஜீ.புஞ்சிஹேவா மற்றும் ரி.செல்வகுமாரன் ஆகிய நால்வரையும் உறுப்பினர்களாகவும் ஜனாதிபதி அறிவித்தார்.

ரி.செல்வகுமாரன் மற்றும் முன்னாள் நீதிபதி சாலிம் மர்சூப் ஆகியோர் தமது பதவிகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதுடன், ஏனைய மூவரும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பொது அலுவலகத்தில் பணியாற்றுவதாலும், நீதித்துறை சார்ந்த கடமைகளுக்காகவும் இவர்கள் இருவரும் பதவிகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். செல்வகுமாரன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்விவியலாளராகக் கடமையாற்றுவதுடன், நீதியரசர் மர்சூப் பீஜீ நாட்டுக்கு விரைவில் நீதிபதியாகச் செல்லவுள்ளார். இந்தக் காரணங்களுக்காக அவர்கள் இருவரும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.

ஐவரைக் கொண்ட தகவலறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆணைக்குழுவிற்கு மேலும் இருவரை நியமிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

தகவலறியும் சட்டமானது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாகாணசபை உறுப்பினர்கள் அல்லது அரச மற்றும் நீதித்துறையில் பதவிவகிப்பவர்களை ஆணைக்குழுவுக்கு நியமிக்க முடியாது எனக் கூறுகிறது.

அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைக்கு அமைய ஐவர் கொண்ட ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிப்பார். அரசியலமைப்பு சபைக்கு, சட்டத்தரணிகள் சங்கம் சட்டத்தரணி அல்லது சட்டத்துறை நிபுணர் ஒருவரின் பெயரை பிரேரிக்கலாம். வெளியீட்டாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்கள் ஒருவருடைய பெயரை பிரேரிக்கலாம், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றுமொரு நபரை பிரேரிக்கலாம். இதற்கு அமைய பொருத்தமானவர்களின் பெயர்களை அரசியலமைப்பு சபை ஜனாதிபதியிடம் ஆற்றுப்படுத்தும்.

Untitled-1

Related posts: