உறவுகள் புதையுண்ட இடத்தில் வசிக்க முடியாது: புலத்கொஹுபிட்டிய மக்கள்!

Sunday, May 29th, 2016

மண்சரிவு அபாயம் நிலவும் கலுபஹன தோட்டத்தில், உறவுகள் புதையுண்ட மண்ணில் மீண்டும் சென்று வசிக்க முடியாது என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அமைதிகாக்கும் மலைத்தொடர்கள் எப்போதேனும் சீற்றமடையக் கூடும் என்பதை நன்குணர்ந்தவர்கள் பெருந்தோட்ட பாட்டாளி மக்கள்.

பிஞ்சுப் பாலகர்கள் ஓடி விளையாடிய கலுபஹன தோட்டம் இன்று மயான பூமியாக காட்சியளிக்கிறது.கலுபஹன மண்சரிவையடுத்து அதனை அண்மித்த எதுராபொல, உருமிவல தோட்ட மக்களும் இடம்பெயர்ந்தனர்.

நாதியற்று நின்ற இந்த மக்களுக்கு, யக்கல்ல சீலானந்த மகா வித்தியாலயமே தஞ்சம் கொடுத்தது. இடம்பெயர்ந்திருந்த 400க்கும் மேற்பட்டவர்களில் பலர் உயிருக்கு உத்தரவாதமற்ற பகுதிகளுக்கே மீண்டும் சென்றுள்ளனர்.

வீடுகளை முற்றாகப் பறிகொடுத்த 5 குடும்பங்கள் அடங்கலாக சுமார் 200 பேர் யக்கல்ல சீலானந்த மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.

நாளை (30) பாடசாலை செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் கேகாலை மாவட்ட செயலாளர் அபேவிக்ரம வனசூரிய கூறுகையில், 20 பாடசாலைகளில் மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறித்த பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும், ஆரம்பிக்கப்படும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார். இதேவேளை, அனைத்தையும் இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள தமக்கு பாதுகாப்பான இருப்பிடங்கள் விரைவில் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: