உயர்தர மாணவர்கள் தமிழ்மொழியை கற்கும் ஆர்வம் அருகி வருகிறது – பேராசிரியர் மனோன்மணி!

Friday, March 16th, 2018

யாழ். மாவட்டத்தில் தமிழ்மொழிப் பாடத்தை க.பொ.த உயர்தரத்தில் ஒரு பாடமாக கற்கும் மாணவர் எண்ணிக்கை அருகி வருகிறது. சித்தி வீதமும் குறைவடைந்து செல்கிறது. இந்தப் பின்னடைவைச் சீர் செய்வதற்கு கல்வித்துறை சார்ந்தவர்கள் முன் வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் நல்லை ஆதீன மண்டபத்தில் நடைபெற்றபோது தலைமையுரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் தமிழ் பின்தங்கியுள்ளது. ஆங்கிலக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, கணினிக் கல்வி என்பவற்றில் மாணவர் காட்டும் அக்கறை தமிழ்ப் பாடத்தில் இல்லை. தமிழ், இந்துநாகரீகம் போன்ற பாடங்களைத் தெரிவு செய்வதற்கு மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழ் பாட கற்கையின் பின்னடைவைத் தமிழ் சங்கத்தின் ஊடாக சீர் செய்ய வேண்டும். தமிழ் கற்கும் வேட்கையை இளைய தலைமுறையினரிடையே ஏற்படுத்த வேண்டும். தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ் சங்கத்தில் வந்து இணைந்து கொள்ள வேண்டும். மாணவர்களிடையே தமிழ் கற்கும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பண்பாடு சிதைவடைந்து செல்வது பற்றி இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. தூய தமிழ்ப் பண்பாட்டின் சொந்தக்காரர்களான நாம் எமது பண்பாடு பாரம்பரியங்களைக் கட்டிக் காக்க வேண்டும். 1200 ஆண்டு கால பழமை வாய்ந்தது யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம். இது நிரந்தரமான காணி, கட்டடம், பணிமனை இன்றி இயங்கி வருகிறது. இச் சங்கத்திற்கென நிரந்தரமான கட்டடத்தில் பணிமனை அமைந்துவிட்டால் புலம்பெயர் தமிழர் தாராளமாகப் பண உதவி செய்வார்கள்.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் எதிர்காலத்தில் திருவள்ளுவர் விழா, பாரதி விழா, நாவலர் விழா ஆகிய மூன்று விழாக்களை மட்டுமே நடத்தவுள்ளது. எல்லாக் கலைகளையும் ஒன்றிணைத்து மூன்று நாள் முத்தமிழ் விழாவை நடத்த எண்ணியுள்ளோம்.

இதற்கு முன்னோடியாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையுடன் பாடசாலை மாணவர்களிடையே தமிழ்த்திறன் போட்டிகளை நடத்தி இளைய தலைமுறையினரிடையே தமிழ்மொழி உணர்வை ஊக்குவிக்க வேண்டும்.

இளைய தலைமுறையினர் தமிழ்ச்சங்கத்தில் சேரவேண்டும். மாணவர்கள் மாணவ அங்கத்தவராக இணைந்து கொள்ள முடியும்.

தமிழ் மீது ஆர்வம் கொண்ட தமிழ் அபிமானிகள் தமிழ்ச்சங்கத்தில் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்.

தமிழகத்தில் இருந்து புலமை வாய்ந்தவர்கள் பலர் யாழ்ப்பாணத் தமிழ் சங்கத்தில் இணைந்திருந்தார்கள். மீண்டும் தமிழ்ச் சங்கம் புத்தெழுச்சி பெற்று வருகிறது. எதிர்காலத்தில் இச் சங்கத்தின் பணிகள் மேலும் விரிவடையும் எனவும் குறிப்பிட்டார். அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

Related posts:

நாட்டை முடக்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை; இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!
நாட்டில் கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் தொகை குறித்து மதிப்பீடு - சந்தை, வணிக மற்றும...
கல்வி சீர்திருத்த செயற்பாடு நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக...